Grace and Truth

This website is under construction !

Search in "Tamil":

Home -- Tamil -- 08. Good News -- 9 Why did Jesus die for your sins?

This page in: -- Chinese -- English -- French -- German? -- Indonesian -- TAMIL -- Turkish

Previous lesson -- Next lesson

08. இஸ்லாமியருடன் நற்செய்தியைப் பகிர்ந்துகொள்ளுதல்

9 - கிறிஸ்து ஏன் உங்களுடைய பாவங்களுக்காக மரித்தார்?



சவால்: சில முஸ்லிம்கள் இஸ்லாத்தையும் குரானையும் கைவிட்டு சத்தியத்தைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். வேறு சில முஸ்லிம்கள் கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டார் என்று குரானிலிருந்து அறிந்துகொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட முஸ்லிம்கள் கீழ்க்காணும் கேள்விகளைக் கேட்கிறார்கள்: கிறிஸ்து ஏன் சிலுவையில் மரித்தார்? அவருடைய சிலுவை மரணம் எனக்கு அவசியமா? கிறிஸ்துவின் பலி மரணத்தைக் குறித்து வேதாகமம் என்ன சொல்லகிறது? கிறிஸ்துவின் சிலுவை மரணம் என்பது அர்த்தமற்ற ஒன்றல்ல, மிகவும் முக்கியமான ஒன்று என்பதை வேதாகமம் விளக்குகிறதா?

பதில்: “கிறிஸ்துவானவர் வேத வாக்கியங்களின்படி நம்முடைய பாவங்களுக்காக மரித்தார்” (1 கொரிந்தியர் 15:3) என்பதுதான் நற்செய்தியின் மிகச் சுருக்கமான வடிவம். கிறிஸ்து ஏன் நம்முடைய பாவங்களுக்காக மரித்தார்? நம்முடைய பாவங்களுக்கான தண்டனையை தன்மீது ஏற்றுக்கொள்வதற்காகவும், இறைவனுக்கு முன்பாக உள்ள நம்முடைய குற்றத்தை நீக்குவதற்காகவும், பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து நம்மை விடுவிப்பதற்காகவும், நம்முடைய சொந்தப் பாவங்களிலிருந்து நம்மைச் சுத்திகரிப்பதற்காகவும், நம்மை மரணத்திலிருந்து விடுவித்து, நமக்குப் புதிய வாழ்வைக் கொடுப்பதற்காகவும் அவர் மரித்தார். மேலும் நம்முடைய பாவ பரிகாரபலியாகவும் அவர் மரித்தார். கிறிஸ்துவின் மரணத்திற்கான காரணத்தைக் குறித்த இந்த விளக்கம் மோசேயின் தவ்ராத்திலிருந்து வருகிறது. அது கிறிஸ்துவின் மரணத்தினுடைய வேறுபல விளைவுகளையும் விளக்குகிறது.

தவ்ராத்திலுள்ள பாவப்பரிகாரம்: தவ்ராத்திலுள்ள இறைவனுடைய கட்டளைகள் கீழ்க்காணும் காரியங்களை விவரிக்கிறது. அன்றியும் தேசத்திலே பிறந்தவர்களிலாகிலும் அந்நியர்களிலாகிலும் எவனாவது துணிகரமாய் யாதொன்றைச் செய்தால், அவன் கர்த்தரை நிந்திக்கிறான்; அந்த ஆத்துமா தன் ஜனத்தாரில் இராதபடிக்கு அறுப்புண்டுபோகவேண்டும். (எண்ணாகமம் 15:30). அறியாமல் குற்றம் செய்தவர்களுக்குத் தண்டனை கொடுக்கப்படாவிட்டாலும் அவர்களுக்காக பாவப்பரிகாரம் செய்யப்பட வேண்டும் (எண்ணாகமம் 15:22-25). அவ்வாறு அறியாமல் பாவம் செய்தவர்களும் தங்கள் பாவத்திற்கான பரிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக கீழ்க்காணும் காரியங்களைச் செய்ய வேண்டும் என்று தவ்ராத் குறிப்பிடுகிறது (லேவியராகமம் 4:27-31): ஆசரிப்புக் கூடாரத்திற்கு அல்லது தேவாலயத்திற்கு அவர் ஒரு மிருகத்தைக் கொண்டுவர வேண்டும்; குற்றஞ் செய்தவருடைய இடத்தில் அந்த மிருகம் சாகும் என்பதற்கு அடையாளமாக அவர் அந்த மிருகத்தின் தலையின் மீது தன்னுடைய கைகளை வைக்க வேண்டும்; அதன் பிறகு அது ஆசரிப்பு கூடாரத்தில் அல்லது தேவாலயத்திலுள்ள பலிபீடத்தின் மீது அது பலியிடப்பட வேண்டும். பிறகு இறைவனுடைய வாசஸ்தலத்திலிருக்கும் ஆசாரியன் அந்தப் பலியின் இரத்தத்தில் கொஞ்சத்தைத் தன்னுடைய கைவிரலினால் எடுத்து அதை பலிபீடத்தின் கொம்புகளில் தடவ வேண்டும். இவ்விதமாக ஆசாரியன் பாவப்பரிகாரம் செய்யும்போதுதான், பாவம் செய்தவருடைய பாவங்கள் மன்னிக்கப்படுகிறது.

இவைகளின் பொருள் என்ன? பாவம் செய்த நபர் அவர் செய்த பாவத்திற்காக உண்மையில் கொல்லப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவருடைய இடத்தில் ஒரு மிருகம் கொல்லப்படும்படி இறைவன் கட்டளையிட்டதால் அவர் கொல்லப்படாமல் காக்கப்படுகிறார். அந்த மிருகத்தின் மீது பாவம் செய்தவர் தன்னுடைய கையை வைக்கும்போது இவ்விதமாகச் சொல்லுகிறார்: இந்த மிருகத்திற்கு நடைபெறும் காரியம் எனக்கு நடைபெறுகிறது. ஒரு மிருகத்தின் உயிர் அதன் இரத்தத்தில் இருக்கிறது (லேவியராகமம் 17:11). அந்த மிருகம் பாவம் செய்தவருக்குப் பதிலாக மரிப்பதால், மிருகத்தினுடைய இரத்தத்தினால் பாவியினுடைய ஆத்துமா காக்கப்படுகிறது. வாசஸ்தலம் என்பது இறைவன் தம்முடைய மக்கள் நடுவில் வாழும் இடமாகும் (யாத்திராகமம் 40:34-35). வாசஸ்தலத்திலுள்ள பலிபீடம் இறைவனுடைய சமூகத்தில் நிற்கிறது. பலிபீடத்திலுள்ள கொம்புகள் இறைவனுடைய பிரசன்னத்தின் வல்லமையைக் காண்பிக்கிறது. பலி செலுத்தப்பட்ட மிருகத்தின் இரத்தத்தை பலிபீடத்தின் மீது தடவும்போது, அதன் மூலமாக இறைவனுடைய வல்லமையோடு அந்தப் பாவி தொடர்பில் வருகிறார். பலி செலுத்தப்பட்ட மிருகத்தினுடைய மரணத்தின் மூலமாகவே அந்தப் பிரசன்னமும் வல்லமையும் அவருக்கு வாழ்வைக் கொடுக்கிறது.

அந்தப் பாவிக்காக ஒரு மிருகம் பலியிடப்பட வேண்டும் என்று இறைவன் கூறும்போது அவர் பாவத்தை எவ்வளவு மோசமானதாகப் பார்க்கிறார் என்பது தெளிவாகிறது. ஒவ்வொரு பாவமும் மரணத்திற்கும் இறைவனுடைய பிரசன்னத்தைவிட்டுப் பிரிந்து போகுதலுக்கும் வழியேற்படுத்துகிறது. (பலிபீடத்தின் மீது பலியிடப்பட்ட மிருகத்தின் மூலமாக) ஆசாரியர் பாவிக்காக பரிகாரம் செய்தபடியால் இறைவன் அந்தப் பாவியை வாழ அனுமதிக்கிறார். இது இறைவன் பாவத்தை மேற்கொள்கிறார் என்பதைக் காண்பிக்கிறது. பாவப்பரிகாரம் அந்தப் பாவியை மீண்டும் இறைவனுடன் இணைத்து அவனுக்குப் புது வாழ்வளிக்கிறது. பாவப்பரிகாரம் மட்டுமே பாவத்தின் கொடூரத்தன்மையைக் காண்பிக்கிறதாகவும் அதிலிருந்து மனிதனை விடுவிப்பதாகவும் இருக்கிறது.

நற்செய்தியில் உள்ள பாவப்பரிகாரம்: தவ்ராத்தில் உள்ள இந்தப் பாவப்பரிகாரத்தின் கட்டளைகளை நற்செய்தி நூல்கள் எடுத்து கிறிஸ்துவின் மரணத்தை விளக்குவதற்குப் பயன்படுத்துகிறது. கிறிஸ்து நம்முடைய பாவங்களுக்கான பரிகாரபலியாக மரித்தார். (1 யோவான் 2:2; 4:10 – அறியாமல் செய்த பாவங்களுக்காக மட்டுமல்ல!). தவ்ராத்திலுள்ள பலிமிருகங்களினால் வரும் பாவப்பரிகாரத்திற்கும் நற்செய்தியிலுள்ள கிறிஸ்துவின் சிலுவை மரணத்தினால் உண்டாகும் பாவப்பரிகாரத்திற்கும் இடையில் வித்தியாசம் இருக்கிறது. பலிமிருகங்களினால் வரும் பாவப்பரிகாரத்தில் மூன்று காரியங்கள் தனித்தனியாக இருக்கிறது. அவை பலிமிருகம், ஆசாரியன், பலிபீடம். ஆனால் கிறிஸ்துவின் சிலுவை மரணத்தினால் உண்டான பரிகாரத்தில் இவையனைத்தும் ஒன்றாயிருக்கிறது. அ) தம்முடைய இரத்தத்தைச் சிந்தி சிலுவையில் மரித்த கிறிஸ்து பலியாக இருக்கிறார். (எபிரெயர் 9:12,14). ஆ) பாவிகளுக்காக இரத்த பலிகளைச் செலுத்தும் இறைவனுடைய கட்டளையைப் பெற்ற ஆசாரியனாக இருக்கிறார். (எபிரெயர் 2:17; 9:11) இ) அதே வேளையில், இறைமகனாகிய கிறிஸ்து, இறைவனுடைய வாசஸ்தலத்தில் பாவிக்கு வாழ்வைக் கொடுக்கும் பலிபீடத்தைப் போல, இறைவனுடைய பிரசன்னத்தினால் பாவிகளுக்கு வாழ்வளிப்பவராகவும் இருக்கிறார் (ரோமர் 3:24-25; எபிரெயர் 9:24).

கிறிஸ்து உங்களுடைய பாவங்களுக்காக சிலுவையில் மரித்தார் என்று நீங்கள் விசுவாசிக்கும்போது நீங்கள் இரண்டு காரியங்களை ஒரே நேரத்தில் செய்கிறீர்கள்.

1. நீங்கள் உங்கள் பாவங்களை ஏற்றுக்கொண்டு அவற்றை அறிக்கையிடுகிறீர்கள். ஏனெனில் தவ்ராத்திலும் நற்செய்தியிலும் சொல்லப்பட்டிருக்கிற கட்டளைகளின்படி நீங்கள் பாவத்தினால் மரண தண்டனைக்கு உட்பட்டிருக்கிறீர்கள். மேலும் சிலுவையில் கிறிஸ்து மரித்தபோது, உங்களுக்குப் பதிலாக அவர் மரித்தார் என்பதையும் அறிக்கையிடுகிறீர்கள். இதன் மூலமாக உங்கள் பாவத்தின் கொடூரத் தன்மையை அறிக்கையிடுகிறீர்கள்.

2. மேலும் இதன் மூலமாக கிறிஸ்துவின் சிலுவையில் இறைவன் பாவத்தின் மரணத்திற்கேதுவான தன்மையை மேற்கொண்டார் என்றும் அறிக்கையிடுகிறீர்கள். ஏனெனில் அ) உங்களுக்காக உங்கள் இடத்தில் மரித்த கிறிஸ்துவின் சிந்தப்பட்ட இரத்தத்தில்தான் உங்களுடைய ஆத்துமா இருக்கிறது என்று நீங்கள் அறிக்கை செய்கிறீர்கள் ஆ) இறைவனுடைய சமூகத்தில் உங்களுக்கான பாவப்பரிகாரத்தைச் செலுத்தும்படி கிறிஸ்து இறைவனுடைய சமூகத்தில் தம்முடைய சொந்த இரத்தத்துடன் பிரவேசித்தார் என்பதை நீங்கள் அறிக்கை செய்கிறீர்கள். இ) இறுதியாக நீங்கள் இறைவனுடைய மகனாக கிறிஸ்து தாமே இறைவனுடைய பிரசன்னமாக இருக்கிறார் என்றும் கிறிஸ்துவினுடைய இரத்தத்தில் உங்களுடைய ஆத்துமா கிறிஸ்துவிலுள்ள இறைவனுடைய பிரசன்னத்தைத் அனுபவிப்பதால் உங்களுக்குப் புதிய வாழ்வு அருளப்படுகிறது என்பதை அறிக்கை செய்கிறீர்கள்.

இவ்வாறு கிறிஸ்துவினுடைய இரத்தத்தின் பாதுகாப்பிற்குள் உங்கள் வாழ்வை ஒப்புக்கொடுத்து விட்டால், வானத்திலும் பூமியிலும் பூமிக்குக் கீழிருக்கிற எந்த வல்லமையும் உங்களை இறைவனிடமிருந்து பிரிக்க முடியாது. கிறிஸ்துவின் பதிலாள் பரிகார மரணம் பாவத்தையும், பிசாசையும், மரணத்தையும், இறைவனுடைய கோபத்தையும்விடப் பெரியது! நீங்கள் அவருடைய சிலுவை மரணத்தை விசுவாசிப்பீர்களானால் உங்கள் உள்ளான மனிதன் கிறிஸ்துவினுடைய பரிகார பலியின் மூலமாக இறைவனோடு பிரிக்க முடியாதவாறு இணைக்கப்பட்டுவிடும். அப்போது பாவமோ, பிசாசோ, மரணமோ இறைவனைவிட்டு உங்களைப் பிரிக்க முடியாது. ஆகவே கிறிஸ்து உங்கள் பாவங்களுக்காக மரித்தார் என்று நீங்கள் நம்பினால் பிசாசுகளுக்கு உங்கள் மீது அதிகாரம் இல்லை.

நல்ல செய்தி: கிறிஸ்து உங்களுடைய பாவங்களுக்காக சிலுவையில் மரித்தார். உங்களுடைய மீறுதல்கள் மரணத்திற்கு ஏதுவான தீமைகள் என்று சொல்லும்படி அவர் மரித்தார். ஆனால் அவருடைய மரணம் உங்களை நித்திய அழிவிலிருந்து காப்பதற்கானது. உங்கள் பாவத்தினால் உங்களுக்கும் இறைவனுக்கும் இடையில் ஏற்பட்ட பிரிவினையை கிறிஸ்து தம்முடைய இரத்தத்தினால் உண்டான பரிகாரத்தினால் மேற்கொண்டார். இதை நீங்கள் விசுவாசித்தால் இறைவனையும் அவருடைய அன்பையும்விட்டு உங்களைப் பிரிக்க எந்த சக்தியாலும் கூடாது.

சாட்சி: என்னுடைய பெயர் தௌபிஃக், நான் நைஜீரியாவில் வாழ்கிறேன். என்னுடைய தாயும் தந்தையும் முஸ்லிம்கள். நான் சிறுவனாக இருக்கும்படி என்னைப் பராமரித்து வளர்க்கும் பொறுப்பை என் பெற்றோர் ஒரு இஸ்லாமிய ஷேக்கினிடத்தில் ஒப்படைத்திருந்தனர். அவரிடமிருந்து குரானுடைய பெரும்பகுதியை மனப்பாடமாகக் கற்றுக்கொண்டேன். அதேவேளையில் பிசாசுகளுடன் தொடர்புகொள்ளவும் அவர் என்னைப் பயன்படுத்தினார். அவர் ஒரு மந்திரவாதியாக இருந்த காரணத்தினால் அவர் இப்படிச் செய்தார். அவர் எனக்கு ஒரு தாயத்தைக் கொடுத்திருந்தார். அது என்னைக் கட்டுப்படுத்தியிருந்தது. பிறகு, நான் என்னுடைய பள்ளிப் படிப்பை முடித்துக்கொண்டு, ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்தபோது, எனக்குச் சில கிறிஸ்தவ நண்பர்கள் கிடைத்தார்கள். நான் அவர்கள் மூலமாக இயேசுவின் நற்செய்தியைக் கேள்விப்பட்டேன். நான் இயேசு கிறிஸ்துவைப் பற்றிய ஒரு படத்தையும் பார்த்தேன். அதில் ஒரு பகுதி என்னை அதிகம் தொட்டது. அதில் கிறிஸ்து தன்னைப் பற்றி இவ்வாறு கூறுகிறார்: “நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன். என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்” (யோவான் 14:6). நான் கிறிஸ்துவைப் பின்பற்ற வேண்டும் என்று முடிவு செய்து, திருமுழுக்குப் பெற்றுக்கொண்டேன். ஆயினும் நான் அந்த தாயத்தை அணிந்துகொண்டுதான் இருந்தேன். ஒருவேளை அதை நான் கழற்றினால் ஏதேனும் ஆபத்து நேரிடலாம் என்று பயந்தேன். ஒரு நாள் நான் ஒரு திருச்சபை ஆராதனையில் கலந்துகொண்டேன். அதில் “தாயத்து அணிந்திருக்கும் கிறிஸ்தவர்கள்” என்பதைப் பற்றி அந்தப் போதகர் பிரசங்கித்தார். அந்தப் பிரசங்கத்தின் நடுவில் அவர் என்னைப் பார்த்து, “நீ இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்ய முடியாது. நீ கிறிஸ்துவைப் பின்பற்ற விரும்பினால் அந்தத் தாயத்தை எறிந்துபோடு” என்று அவர் கூறினார். அவருடைய விரல் நேரடியாக என்னைத்தான் காட்டியது. அப்போது நான் அந்தத் தாயத்தை அணிந்துகொண்டுதான் இருந்தேன். அந்தப் பிரசங்கம் என்னை உருவக் குத்தியது. அடுத்த நாள் நான் கிறிஸ்துவிடம் பாவ மன்னிப்பைக் கேட்டுவிட்டு அந்தத் தாயத்தை அவிழ்த்து எறிந்து விட்டேன். இறுதியில் நான் அதிலிருந்து விடுவிக்கப்பட்டேன். ஆனால் எனக்கு எந்தத் தீமையும் நிகழ்ந்துவிடவில்லை! அதற்கு மாறாக கிறிஸ்து அன்றிலிருந்து என்னை அதிகமாக ஆசீர்வதித்தார். கிறிஸ்து என்னுடைய பாவங்களுக்காக மரித்த காரணத்தினால் அந்த தாயத்தின் வல்லமையை முறியடித்தார்.

விண்ணப்பம்: இயேசு கிறிஸ்துவே நீர் என்னுடைய பாவங்களுக்காக சிலுவையில் மரித்ததற்காக உமக்கு நன்றி. என்னுடைய பாவத்தையும் குற்றத்தையும் நான் உம்மிடம் அறிக்கை செய்கிறேன். நீர் எனக்குப் பதிலாக சிலுவையில் பலியானீர் என்பதை நான் நம்புகிறேன். நான் உம்முடைய இரத்தத்தின் பாதுகாப்பில் என்னை ஒப்படைக்கிறேன். நீர் எனக்காகப் பாவப்பரிகாரத்தை உண்டுபண்ணியதால், நான் பாவம், மரணம், பிசாசு ஆகிவற்றின் ஆதிக்கத்திலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறேன்.

கேள்விகள: கிறிஸ்து ஏன் உங்களுடைய பாவங்களுக்காக மரித்தார்? தவ்ராத்தில் மிருக பலிகளினால் உண்டாகும் பாவப்பரிகாரத்திற்கும் நற்செய்தியில் கிறிஸ்துவினுடைய சிலுவைப் பலியினால் உண்டாகும் பாவப்பரிகாரத்திற்கும் இடையிலுள்ள வித்தியாசம் என்ன?

மனப்பாடம்: தேவன் உலகத்தாருடைய பாவங்களை எண்ணாமல், கிறிஸ்துவுக்குள் அவர்களைத் தமக்கு ஒப்புரவாக்கி, ஒப்புரவாக்குதலின் உபதேசத்தை எங்களிடத்தில் ஒப்புவித்தார். (2 கொரிந்தியர் 5:19 – அப்போஸ்தலனாகிய பவுலுடைய வார்த்தைகள்).

www.Grace-and-Truth.net

Page last modified on June 07, 2013, at 11:18 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)