Grace and Truth

This website is under construction !

Search in "Tamil":

Home -- Tamil -- 08. Good News -- 11 Why Muhammad and not Christ?

This page in: -- Chinese -- English -- French -- German? -- Indonesian -- TAMIL -- Turkish

Previous lesson -- Next lesson

08. இஸ்லாமியருடன் நற்செய்தியைப் பகிர்ந்துகொள்ளுதல்

11 - கிறிஸ்துவை விடுத்து முகமதுவை ஏற்பது ஏன்?



சவால்: பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர் இறைவன் இல்லை என்று முஸ்லிம்கள் நம்புகிறார்கள். இயேசு கிறிஸ்துவில் வெளிப்படுத்தப்பட்ட இறைவனுடைய நேரடியான வெளிப்பாட்டைக் குறித்த நற்செய்தியின் சாட்சியை அவர்கள் புறக்கணிக்கிறார்கள். மாறாக, அவர்கள் முகமதுவின் மூலமாக மறைமுகமாக வந்து குரானில் எழுதப்பட்டுள்ள வெளிப்பாட்டைக் குறித்த முகமதுவின் சாட்சியை ஏற்றுக்கொள்கிறார்கள். முகமதுவின் மூலமாக வந்த குரானுடைய செய்தியை உண்மை என்று ஏற்றுக்கொள்ளும் அவர்கள் நற்செய்தியின் மூலமாக வரும் இயேசு கிறிஸ்துவின் செய்தியை கிறிஸ்தவர்களுடைய ஏமாற்றுவேலை என்று அவர்கள் கருதுகிறார்கள். கிறிஸ்தவர்கள் நற்செய்தியின் கிறிஸ்துவைப் பின்பற்றக்கூடாது என்றும் அவர்கள் குரானுடைய முகமதுவைப் பின்பற்ற வேண்டும் என்றும் இஸ்லாமியர்கள் அழைப்பு விடுகிறார்கள். அப்படிப்பட்ட அழைப்பை ஒரு கிறிஸ்தவன் ஏற்றுக்கொள்ள முடியுமா? கிறிஸ்துவைப் பின்பற்றாமல் ஒருவர் முகமதுவின் குரானைப் பின்பற்ற முடியுமா?

பதில்: குரானை மட்டும் எடுத்துக்கொண்டு, இஸ்லாமியர்களின் அடிப்படை நூலாகிய அது கிறிஸ்துவைப் பற்றியும் முகமதுவைப் பற்றியும் சொல்லுகிற காரியங்களை ஒப்பிட்டுப் பார்த்தால் அது நமக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது. இதுதொடர்பான அனைத்துக் குரானிய பாடங்களும் பெரும்பாலும் முகமதுவைவிட கிறிஸ்துவை அதி உயர்வான ஒருவராகவே சித்தரிக்கிறது.

கிறிஸ்துவையும் முகமதுவையும் பற்றிய தெய்வீக தீர்க்கதரிசனங்கள்: கிறிஸ்துவின் பிறப்புதான் தேவதூதர்களால் அறிவிக்கப்பட்டது, முகமதுவின் பிறப்பை அவ்வாறு தேவதூதர்கள் அறிவிக்கவில்லை. இயேசுவின் தாயாகிய மர்யமிடம் தேவதூதர்கள் இவ்வாறு சொன்னார்கள்: “வானவர்கள் கூறினார்கள், “மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்து ஒரு வார்த்தையைக் கொண்டு உமக்கு (ஒரு மகவு வரவிருப்பது பற்றி) நன்மாராயம் கூறுகின்றான்; அதன் பெயர் மஸீஹ்; மர்யமின் மகன் ஈஸô என்பதாகும்; அவர் இவ்வுலகத்திலும், மறுமையிலும் கண்ணியமிக்கவராகவும் (இறைவனுக்கு நெருங்கியவர்களில் ஒருவராகவும் இருப்பார்).” (சுரா அலு இம்ரான் 3:45). ஆகவே கிறிஸ்து மாம்சத்தில் வந்த இறைவார்த்தை, முகமது இறைவனுடைய வார்த்தையைக் கேட்டவர் மட்டுமே.

கிறிஸ்துவின் பிறப்பும் முகமதுவின் பிறப்பும்: கிறிஸ்து அற்புதமான முறையில் கன்னி மரியாளிடத்தில் பிறந்தார். ஆனால் முகமது அவருடைய தாய் தந்தையாகிய அப்துல்லாவிற்கும் ஆமினாவிற்கும் இயற்கையான முறையில் பிறந்தார். மனித குலத்தில் பிறந்தவர்களில் கிறிஸ்து தனித்துவமானவர். ஏனெனில் அவருடைய தந்தை ஒரு மனிதனல்ல. ஆனால் இறைவன் தம்முடைய வார்த்தையை மர்யமிடத்தில் வைத்து, தம்முடைய ஆவியை அவருக்குள் ஊதியபோது கிறிஸ்து பெற்றெடுக்கப்பட்டார். “...நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய ஈஸô மஸீஹ் அல்லாஹ்வின் தூதர்தான்; இன்னும் ("ஆகுக' என்ற) அல்லாஹ்னுடைய வாக்காக (அதனால் உண்டானவராகவும்) இருக்கின்றார்; அதை அவன் மர்யமின்பால் போட்டான்;..” (சுரா அன்னிஸôவு 4:171). “இன்னும், தம் கற்பைக் காத்துக்கொண்ட (மர்யம் என்ப)வரைப் பற்றி (நபியே! நினைவு கூரும்); எனினும், நம் ஆன்மாவிலிருந்து நாம் அவரில் ஊதிய அவரையும், அவர் புதல்வரையும் அகிலத்தாருக்கு ஓர் அத்தாட்சியாகவும் ஆக்கினோம்.” (சுரா அல் அன்பியா 21:91; சுரா 66:22-ஐயும் பார்க்க).

கிறிஸ்துவின் நீதியும் முகமதுவின் நீதியும்: கிறிஸ்து பாவமற்றவர். ஒருபோதும் ஒரு பாவமும் செய்யவில்லை. ஆனால் முகமது தன்னுடைய பாவங்களுக்காக மன்னிப்புக் கேட்டார். குரானுடைய போதனையின் படி எல்லா மனிதர்களுமே பாவிகள். கிறிஸ்துவைத் தவிர அல்லாஹ்வின் அனைத்துத் தூதர்களும் பாவிகளே (இதற்கு யஹ்யா எனப்படும் யோவான் ஸ்நானும் ஒருவேளை விதிவிலக்காக இருக்கலாம். மர்யம் 19:13). அல்லாஹ்வின் ஒரு தூதுவர் கிறிஸ்துவைக் குறித்து மர்யமிடம் கூறுகிறார்: “நிச்சயமாக நான் உம்முடைய இறைவனுடைய தூதன்; பரிசுத்தமான புதல்வரை உமக்கு நன்கொடை அளிக்க வந்துள்ளேன்” (சுரா மர்யம் 19:19). இதற்கு மாறாக முகமது தன்னுடைய பாவங்களை அறிக்கை செய்யும்படி கட்டளையிடப்படுகிறார்: “ஆகவே, நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று நீர் அறிந்துகொள்வீராக! இன்னும் உம்முடைய பாவத்திற்காகவும், நம்பிக்கையாளர்களான ஆண்களுக்காவும், நம்பிக்கையாளர்களான பெண்களுக்காகவும் (பாவ)மன்னிப்புத் தேடுவீராக!... (சுரா முஹம்மது 47:19; மேலும் 40:55: 94:1-3; 48:1-2 ஆகியற்றையும் காண்க). அல்லாஹ்வின் இந்தக் கட்டளை முஹம்மது பாவம் செய்தவர் என்பதைக் காண்பிக்கிறது.

கிறிஸ்துவின் அகத்தூண்டுதலும் முஹம்மதுவின் அகத்தூண்டுதலும்: கிறிஸ்து இறைவனுடைய வார்த்தையாகவே இருக்கிறார். ஆனால் முஹம்மது வானதூதராகிய ஜிப்ராயீல் மூலமாக அல்லாஹ்வின் வார்த்தைகளைப் பெற்றுக்கொண்டவராக மட்டுமே இருக்கிறார். கிறிஸ்து இறைவனுடைய வார்த்தையைப் பெறுவதற்கு ஒரு மத்தியஸ்தர் தேவையில்லை. காரணம் ஆதிமுதல் வார்த்தை அவரில் இருக்கிறது. அவரே மாம்சத்தில் வந்த இறைவார்த்தையாக இருக்கிறார் (சுரா 3:45). ஆகவே குரான் அவரைப் பற்றி இவ்வாறு சொல்லுகிறது: “இவர் தாம் மர்யமுடைய புதல்வர் ஈஸôவாகிய உண்மை வார்த்தை ஆவார். இவரைக் குறித்தே அவர்கள் சந்தேகம் கொண்டிருக்கின்றனர்.” (சுரா மர்யம் 19:34). ஆனால் முஹம்மதுவோ எப்போதும் ஜிப்ராயீல் தூதுவர் மூலமாக அல்லாஹ்வின் வார்த்தையைப் பெற்றுக்கொண்டிருந்தார். இவ்வாறு அவர் வெளிப்பாட்டைப் பெற்றுக்கொண்டபோதெல்லாம், அந்த அனுபவம் அவருக்கு அதிக களைப்பை ஏற்படுத்தியது. சில வேளைகளில் அவர் மயக்க நிலையில் இருந்தார். அல்லது மதுபான வெறிகொண்டவர்போல் காணப்பட்டார், அல்லது பயங்கர பயம் அவரைப் பற்றிக்கொண்டது. குரானுடைய போதனையின்படி அல்லாஹ் முஹம்மதுவிடம் ஒருபோதும் நேரடியாகப் பேசியதில்லை. ஆனால் இறைவன் புத்தகம், ஞானம், தவ்ராத் மற்றும் இன்ஜீல் ஆகியவற்றை கிறிஸ்துவுக்கு நேரடியாகக் கற்பித்திருக்கிறார் (சுரா 3:48).

கிறிஸ்துவின் அற்புதங்களும் முஹம்மதுவின் அற்புதங்களும்: கிறிஸ்து மனிதர்களைக் குணமாக்கி, இறந்தவர்களை உயிர்ப்பித்தார். ஆனால் முஹம்மதுவின் அற்புதங்கள் இன்று நமக்கு குரானில் எழுதிக்கொடுக்கப்பட்டுள்ள வெறும் வார்த்தைகளே. குரான் கிறிஸ்துவின் அற்புதங்களை இவ்வாறு எடுத்துக்கூறுகிறது. “நான் உங்கள் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியுடன் நிச்சயமாக வந்துள்ளேன்; நான் உங்களுக்காக ஒரு களிமண்ணால் ஒரு பறவையின் உருவத்தைப் போல் உண்டாக்கி நான் அதில் ஊதுவேன்; அது அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு (உயிருடைய) பறவையாகிவிடும்; அல்லாஹ்வினுடைய அனுமதியைக் கொண்டு பிறவிக்குருடனையும், வெண் குஷ்டரோகியையும் குணப்படுத்துவேன்; (சுரா ஆல இம்ரான் 3:49; 5:111). இப்படிப்பட்ட அற்புதங்களை முஹம்மது ஒருபோதும் செய்யவில்லை. அவரைப் பற்றி குரான் இவ்வாறு கூறுகிறது: “அவனுடைய அற்புத அடையாளங்களை (குரான் வசனங்களை) ஓதிக்காட்டும்படி மக்களிலிருந்து ஒரு தூதனை அனுப்புபவன் அல்லாஹ்வே ஆவான்.” (சுரா அல் ஜுமுஆ 62:2 மற்றும் 26:2).

கிறிஸ்துவின் மரணமும் முஹம்மதுவின் மரணமும்: கிறிஸ்துவின் மரணம் அல்லாஹ்வினால் குரானில் முன்னுரைக்கப்பட்டுள்ளது. ஆனால் முஹம்மதுவின் மரணம் அல்லாஹ்வினால் முன்னுரைக்கப்படவில்லை. கிறிஸ்து இறைவனுடைய சித்தத்தின்படி மரித்தார், ஏனென்றால் அவர் மரிப்பதற்கு முன்பாக இறைவன் சொன்னதாவது: “ஈஸôவே! நிச்சயமாக நான் உம்மை மரிக்க அனுமதித்து, இன்னும் என்னளவில் உம்மை உயர்த்திக்கொள்கிறவனாகவும்... இருக்கிறேன்” (சுரா ஆலு இம்ரான் 3:55). முஹம்மதுவைப் பற்றி இப்படிப்பட்ட காரியங்கள் எதையும் குரானில் நாம் வாசிப்பதில்லை. இப்ன் இஸாவினுடைய சிராவின்படி (வாழ்க்கை வரலாற்றுக் குறிப்பு), முஹம்மது யூதர்களால் விஷம் வைத்துக் கொல்லப்பட்டார்; அவர் விஷத்தை துப்பிவிட்டு பிழைத்துக்கொண்டார். ஆனால் பிற்பாடு அந்த விஷத்தின் பாதிப்பினால் காய்ச்சல் கண்டு மரித்தார்.

மரணத்திற்குப் பின்னுள்ள கிறிஸ்துவும் மரணத்திற்குப் பின் முஹம்மதுவும்:' கிறிஸ்து மரணத்திற்குப் பிறகு உயிரோடு எழுந்து, பரமேறி, உலகத்தின் முடிவில் திரும்ப வரும்வரை பரலோகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறார். ஆனால் முஹம்மது மரித்து மெதினாவில் உள்ள பள்ளிவாசலில் அடக்கம்செய்யப்பட்டிருக்கிறார். இறுதிக்கால நிகழ்ச்சிகள் எதிலும் அவருக்குப் பங்கில்லை. கிறிஸ்துவைக் குறித்து இவ்வாறு எழுதப்பட்டுள்ளது: “ஆனால், அல்லாஹ் அவரைத் தன் அளவில் உயர்த்திக்கொண்டான்;” (சுரா அன்னிஸாவு 4:158 மற்றும் 3:55-ஐயும் பார்க்க). மேலும் கிறிஸ்துவைக் குறித்து, “அவர் இவ்வுலகத்திலும், மறுமையிலும் கண்ணியமிக்கவராகவும் (இறைவனுக்கு) நெருங்கியவர்களில் ஒருவராகவும் இருப்பார்.” (சுரா ஆலு இம்ரான் 3:45). குரான் முஹம்மதுவைப் பற்றி அதிகம் பேசுவதில்லை. அவர் இன்றும் மரித்த நிலையில், மெதினாவில் அடக்கம் செய்யப்பட்டுள்ளார். இன்று பெரும் எண்ணிக்கையிலான முஸ்லிம்கள் அவருடைய கல்லறையைப் பார்க்கச் செல்கிறார்கள். ஆனால், கிறிஸ்து இன்று உலகத்திலுள்ள எந்தக் கல்லறையிலும் இல்லை.

துக்க செய்தி: கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவை விட்டுவிட்டு முஹம்மதுவைப் பின்பற்ற வேண்டும் என்று முஸ்லிம்கள் விடுக்கும் அழைப்பைக் கிறிஸ்தவர்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. காரணம் குரான் முஹம்மதுவைவிட கிறிஸ்துவைப் பற்றி உயர்வாகப் பேசுகிறது.

நல்ல செய்தி: கிறிஸ்து மாம்சத்தில் வந்த இறைவார்த்தையாக இருக்கிறார். அவர் கன்னியினிடத்தில் பிறந்தவரும், இரக்கம் நிறைந்தவரும், பாவமில்லாதவருமாயிருக்கிறார். அவர் பிணியாளிகளைச் சுகமாக்கி, மரித்தவர்களை உயிரோடு எழுப்பி, இன்று பரலோகத்தில் இறைவனோடு வாழ்ந்துகொண்டிருக்கிறார். அவர் மட்டுமே நாம் பிற்பற்றுவதற்குத் தகுதிவாய்ந்தவர்.

சாட்சி: என்னுடைய பெயர் அலியு, நான் நைஜீரியாவில் வாழ்கிறேன். நான் முஸ்லிமாக இருந்தபோது என்னுடைய நாட்டிலிருந்து கிறிஸ்தவத்தை முற்றிலுமாக அழித்துவிட முயற்சித்தேன். அதற்காக என்னிடத்தில் போதிய அளவு பணமும், ஆயுதமேந்திய போராளிகளும், அரசாங்கத் தொடர்புகளும், உள்ளூர் சுல்தான்களுடைய ஆதரவும் இருந்தது. வெறுக்கப்பட்ட இயேசுவின் சமயத்திற்கு எதிராக நாங்கள் ஒரு நீண்ட போராட்டத்தைப் போராடினோம். ஆயினும் எங்களுடைய திட்டம் ஒருபோதும் வெற்றியடையவில்லை. நைஜீரியாவிலுள்ள கிறிஸ்தவர்களுக்கு கடுமையான எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்த முடியாதபடி ஒரு மறைவான கரம் அவர்களைப் பாதுகாப்பதை என்னால் உணர முடிந்தது. எனக்கு குரான் மனப்பாடமாகத் தெரியும். அதில் கிறிஸ்து முஹம்மதுவைவிட மேலானவராகச் சித்தரிக்கப்பட்டுள்ளார் என்பதனை நான் மீண்டும் மீண்டும் கவனித்திருக்கிறேன். மற்ற முஸ்லிம்கள் என்னுடைய நிலைப்பாட்டை எதிர்ப்பார்கள் என்று நான் அஞ்சியதால், இருளானதும் மறைவானதுமான சக்திகளிடம் பாதுகாப்புத் தேடினேன். பிசாசுகளின் வல்லமைகளை நான் பயன்படுத்தியதால் நான் நிச்சயமாக நரகத்தின் பாதையில்தான் செல்கிறேன் என்பதை நன்கு அறிந்திருந்தேன். இறுதியில் நான் நிற்கதியான நிலைக்குள்ளானேன். அப்போது நான் என்னுடைய பாவங்களை அறிக்கை செய்து இறைவனுடைய இரட்சிப்பைப் பெற்றுக்கொள்ளும்படி ஒரு போதகரைத் தேடினேன். அவர்களில் பெரும்பான்மையானவர்கள், நான் அவர்களுடைய எதிரி என்பதை அறிந்திருந்த காரணத்தினால், என்னைக் கண்டு அஞ்சினார்கள். இறுதியில் நான் ஒரு போதகரைக் கண்டு என்னுடைய பாவங்களை அறிக்கை செய்தபோது என்னுடைய தோள்களிலிருந்து ஒரு பெரிய பாவமலை உருண்டு ஓடியதைப்போல இருந்தது. “இருளின் வல்லமையின் மீது ஒளியின் வெற்றி” என்பதே என்னுடைய வாழ்வின் நோக்கமாக மாறியது. பல முஸ்லிம்கள் என்னைக் கொலைசெய்வதற்கு முயற்சித்தார்கள். ஆனால் நான் இன்றும் உயிருடன் இருக்கிறேன். அனைத்து இடங்களிலும் முஹம்மதுவைவிட பலமானவரைப் பின்பற்றும்படி நான் அவர்களுக்கு அழைப்பு விடுத்து வருகிறேன்.

விண்ணப்பம்: வெளிச்சத்திற்கு விடுதலைக்கு இறைவனானவரே, நீர் இருளின் அதிகாரங்களைவிட வல்லமையுள்ளவர் என்பதை நான் நம்புகிறேன். நாங்கள் உம்மை அறிந்து விடுதலையைப் பெற்றுக்கொள்ளும்படி, நீர் கிறிஸ்துவை இவ்வுலகத்திற்கு அனுப்பினீர். நீர் உம்முடைய வழியைக் காண்பித்து, உம்முடைய இரட்சிப்பையும் உமது வெளிச்சத்தையும் அனுபவிக்கச் செய்தருளும்.

கேள்விகள்: கிறிஸ்துவையும் முஹம்மதுவையும் பற்றி குரானில் என்ன எழுதப்பட்டுள்ளது? முஹம்மதுவைவிடக் கிறிஸ்து பெரியவரா?

மனப்பாடம்: உனக்கடுத்தவனைச் சிநேகித்து, உன் சத்துருவைப் பகைப்பாயாக என்று சொல்லப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள். இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவுக்குப் புத்திரராயிருப்பீர்கள்; அவர் தீயோர்மேலும் நல்லோர்மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள்மேலும் அநீதியுள்ளவர்கள்மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார். (மத்தேயு 5:43-45-மர்யமின் மகனாகிய கிறிஸ்துவின் வார்த்தைகள்)

www.Grace-and-Truth.net

Page last modified on June 07, 2013, at 11:26 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)