Grace and Truth

This website is under construction !

Search in "Tamil":

Home -- Tamil -- 08. Good News -- 15 Why does the Koran deny the Trinity?

This page in: -- Chinese -- English -- French -- German? -- Indonesian -- TAMIL -- Turkish

Previous lesson -- Next lesson

08. இஸ்லாமியருடன் நற்செய்தியைப் பகிர்ந்துகொள்ளுதல்

15 - குரான் ஏன் திரியேக இறைவனை மறுதலிக்கிறது?



சவால்: இன்று பல முஸ்லிம்கள் திரியேக இறைவனை விசுவாசிக்கிறார்கள். அவர்கள் தங்கள் வாழ்வில் தங்கள் எதிரிகள் மீதான அன்பின் வல்லமையையும், பிதா, குமாரன், பரிசுத்த ஆவியாகிய இறைவனுடைய தாழ்மையையும் சந்தோஷத்தையும் அனுபவிக்கிறார்கள். இவைகளில் எதுவும் முஸ்லிம்களாக அவர்களுடைய வாழ்க்கை நிலையை எந்த வகையிலும் மாற்றவில்லை. ஆனால் சில வேளைகளில் முன்னாள் முஸ்லிம்கள் மீண்டும் இஸ்லாத்திற்குத் திரும்பும்படியாக சோதிக்கப்படலாம். தாங்கள் முஸ்லிம்களாக இருந்த காலத்தில் செய்ததைப் போல திரியேகத்துவத்தை அவர்கள் மீண்டும் மறுதலிக்காதபடி அவர்களுடைய விசுவாசத்தை உறுதிப்படுத்தும்படி பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவரைக் குறித்த வாதங்கள் எதையாவது நாம் குரானோடு தொடர்புபடுத்தி எடுத்துவைக்க முடியுமா?

பதில்: இந்தக் காரியத்தில் வரலாற்று ரீதியாக சில பயனுள்ள காரியங்களை முன்வைக்கலாம். குரான் ஏன் திரியேகத்துவத்தை மறுதலிக்கின்றது என்ற கேள்விக்கான பதிலை அந்தக் காரியங்கள் விளக்குவதாக அமையும். முஹம்மதுவும் அவரைப் பின்பற்றிய முஸ்லிம்களும் அல்ல முதலில் வேதாகமப் போதனையாகிய பிதா, குமாரன், பரிசுத்த ஆவியாகிய திரியேகத்துவத்தை மறுதலித்தவர்கள். இஸ்லாத்தின் தோற்றத்திற்கு முன்பாகவே நற்செய்தியின் திரியேகத்துவ தெய்வத்தை எதிர்த்த குழுக்கள் இருந்திருக்கின்றன. அவர்கள் யூத மார்க்கத்தைச் சேர்ந்தவர்களாகவும், பிதா, குமாரன், பரிசுத்த ஆவியாகிய இறைவனைக் குறித்த நற்செய்தியின் அடிப்படைப் போதனையை அவர்கள் ஏற்றுக்கொள்ளாத காரணத்தினால் கிறிஸ்தவத் திருச்சபையிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களாகவும் இருந்தார்கள். அப்படிப்பட்ட குழுக்களுடைய இஸ்லாத்துக்கு முந்தைய வரலாற்றுக் குறிப்புகள் சிலவற்றை நாம் காணலாம்.

இஸ்லாம் தோன்றுவதற்கு வெகு காலத்திற்கு முன்பாகவே யூத மார்க்கத்து ரபிகள் கிறிஸ்துவின் தெய்வீகத்தைத் தீவிரமாக எதிர்த்தார்கள். அவர்களுடைய பார்வையில் கிறிஸ்து தேவ தூஷணம் சொன்ன காரணத்தினாலேயே அவர்கள் அவரைக் கொல்ல வேண்டும் என்று முடிவு செய்தார்கள். நற்செய்திகளில் உள்ள குறிப்புகள் இதைத் தெளிவுபடுத்துகின்றன.

இயேசுவோ பேசாமலிருந்தார். அப்பொழுது, பிரதான ஆசாரியன் அவரை நோக்கி: நீ தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா? அதை எங்களுக்குச் சொல்லும்படி ஜீவனுள்ள தேவன்பேரில் உன்னை ஆணையிட்டுக் கேட்கிறேன் என்றான். அதற்கு இயேசு: நீர் சொன்னபடிதான்; அன்றியும், மனுஷகுமாரன் சர்வவல்லவருடைய வலதுபாரிசத்தில் வீற்றிருப்பதையும் வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் இதுமுதல் காண்பீர்களென்று, உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். அப்பொழுது பிரதான ஆசாரியன் தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு: இவன் தேவதூஷணம் சொன்னான்; இனிச் சாட்சிகள் நமக்கு வேண்டியதென்ன? இதோ, இவன் தூஷணத்தை இப்பொழுது கேட்டீர்களே. உங்களுக்கு என்னமாய்த் தோன்றுகிறது என்று கேட்டான். அதற்கு அவர்கள்: மரணத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான் என்றார்கள். (மத்தேயு 26:63-66).

இயேசுவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலுக்குப் பிறகு அவர்களுடைய இந்த மனப்பான்மை, இயேசுதான் இறைவனுடைய குமாரனாகிய மேசியா என்று யூதர்களும் புறவினத்து மக்களும் விசுவாசித்ததைப் பார்த்தபோது இன்னும் தீவிரமடைந்தது. ரபித்துவ யூத மார்க்கம் உருவானதற்கு முக்கிய காரணமே இதுதான். அந்த மார்க்கத்தார் வேதாகமத்தோடு “மிஸ்னா” மற்றும் “தல்முத்” ஆகிய இரண்டு புனித நூல்களையும் தங்களுக்குச் சேர்த்துக்கொண்டார்கள். பக்தியுள்ள யூதர்களுடைய கருத்துப்படி “மிஸ்னா” என்பது எழுத்துவடிவில் கொடுக்கப்படாமல் வாய்வழியாகக் கொடுக்கப்பட்ட இறைவனுடைய வெளிப்பாடு, அது மோசேக்குக் கொடுக்கப்பட்ட வெளிப்பாட்டுக்கு அடுத்தபடியான முக்கியத்துவம் வாய்ந்தது. ஆரம்பத்தில் ஆசாரியர்கள் வாய்வழியாக இந்த வெளிப்பாடுகளை அடுத்த தலைமுறைக்கு அறிவித்து வந்தார்கள். பின்பு அது நியாயாதிபதிகளாலும், தீர்க்கதரிசிகளாலும், ஞானவான்களாலும் அறிவிக்கப்பட்டு வந்தது. கடைசியில் ரபிமார்களால் அது அறிவிக்கப்பட்டது. கி. பி. 200-ம் ஆண்டளவில்தான் இந்த இரண்டாவது “வெளிப்பாடு” மிஸ்னா என்ற நூல்வடிவம் பெற்றது. தல்முத் என்பது மிஸ்னாவையும் அதற்கு விரிவான விளக்கவுரையையும் உள்ளடக்கிய நூலாகும். இயேசு கிறிஸ்துவின் காலத்திற்குப் பிறகு, ஆனால் இஸ்லாத்தின் தோற்றத்திற்கு முன் தோன்றிய இந்த ரபித்துவ யூதர்களின் வேத நூற்களாகிய இவற்றில் கிறிஸ்து “யேசு” என்று அழைக்கப்படுகிறார். இது “யம்மாக் ஸிமோ யு-சிக்ரோ” (அவருடைய பெயரும் நினைவும் அழிந்துபோகட்டும்) என்ற வார்த்தைகளின் முதல் எழுத்துக்களிலிருந்து பெறப்படும் பெயராகும். இதனால் மிஸ்னாவில் இயேசுவைக் குறித்த எந்தத் தகவலும் இல்லை. ஆனால் தல்மூத்தில் மிகச் சிறிதளவு பேசப்பட்டுள்ளது. தல்முத் இஸ்ரவேல் மக்களை ஏமாற்றி விக்கிர ஆராதனைக்கு நடத்தியவர்களில் முதன்மையானவர் கிறிஸ்து என்றும், ஏனெனில் அவர் மேசியா இறைவனுடைய மகன் என்று போதித்தவர் என்றும் கூறுகிறது. அவ்விதமான அவருடைய தேவதூஷணத்தின் காரணமாக அவர் கண்டிக்கப்பட்டு, தண்டிக்கப்பட்டது சரியானதே என்று கூறப்பட்டுள்ளது. ஆகவே குரான், கிறிஸ்து இறைவனுடைய குமாரனல்ல என்று கூறும்போது முஹம்மதுவின் காலத்திலிருந்த யூதர்களுடைய போதனையைப் பின்பற்றியே கூறப்பட்டது.

தல்மூத்தைப் போலல்லாது, குரான் கிறிஸ்துவைப் பற்றி நல்ல காரியங்களைப் போதிக்கிறது. உதாரணமாக அவர் மர்யமிடத்தில் அற்புதமான முறையில் பிறந்தார் என்று கூறுகிறது. இதை முஹம்மது யூதர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளவில்லை. ஏனெனில் அவர்கள் தல்மூத்தில் எழுதப்பட்டதையே நம்பினார்கள் (ஆ சாகாப் 104ஆ, ஆ சாகாப் 67அ). அதில் மரியாள் ஒரு ஒழுக்கமில்லாத பெண் என்றும் அவருடைய திருமணத்திற்கு வெளியில் பான்திரோஸ் என்ற ஒரு ரோம பணியாளனுடன் அவருக்குத் தொடர்பிருந்தது என்றும் அதன் விளைவாகப் பிறந்தவரே இயேசு என்றும் எழுதப்பட்டுள்ளது. அப்படியானால் எப்படி தெளிவான சில யூத நம்பிக்கைகளையும் சில கிறிஸ்தவ நம்பிக்கைகளும் குரானில் இடம்பெற்றது? இதற்கான பதிலும் இஸ்லாத்திற்கு முந்தைய காலத்தை ஆய்வதன் மூலம் அறிந்துகொள்ளலாம். இந்தக் காலத்தில் யூதப் போதனைகளையும் கிறிஸ்தவ போதனைகளையும் கலந்து போதித்த குழுக்கள் காணப்பட்டது. அவர்களுடைய எழுத்துக்கள் இன்று நமக்குக் கிடைப்பதில்லை. இஸ்லாத்திற்கு முந்தைய கிறிஸ்தவத் தலைவர்களுடைய எழுத்துக்களில் அவற்றிலிருந்து மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. அவற்றை வைத்து அவர்கள் கிறிஸ்துவைப் பற்றி என்ன நம்பினார்கள் என்பதை நாம் அறிந்துகொள்ள முடியும்.

கிறிஸ்தவத்தின் ஆரம்ப காலகட்டத்தில், எபியோனைட்டுகள் என்று அழைக்கப்பட்ட ஒரு யூத-கிறிஸ்தவ குழு ஒன்றிருந்தது. அவர்கள் தங்களுக்கென்று ஒரு நற்செய்தி நூலை வைத்திருந்தார்கள். எபிபானியஸ் (ஹேயர். 30:13, 6) என்பவர் இந்தக் குழுவைக் குறித்துக் கீழ்க்காணும் காரியங்களை எழுதியிருக்கிறார்: “அவர்கள் கிறிஸ்து இறைவனுடைய குமாரன் அல்ல என்று சொல்லுகிறார்கள். அவர் பிரதான தூதர்களில் ஒருவரைப் போல படைக்கப்பட்டவர்… ஆயினும் அவர் தூதர்களையும் சர்வவல்லவரின் படைப்புகள் அனைத்தையும் ஆட்சிசெய்கிறார். அவர்களுடைய நற்செய்தியின்படி அவர் இந்த செய்தியைக் கொண்டு வந்தார்: நான் பலிமுறைகளை அழிக்க வந்தேன். நீங்கள் பலிகளை நிறுத்தவில்லை என்றால் நீங்கள் எனது கோபத்திலிருந்து தப்பிக்கமாட்டீர்கள்” (ஸ்னிமெல்சருடைய நூல் பகுதி 1, 141- ஜெர்மானிய மொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது – Translated from German in Schneemelcher, volume 1, 141).

இன்னொரு யூத-கிறிஸ்தவ குழு இருந்தது. அவர்கள் நசரேயர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். (இப்பெயர் குரான் கிறிஸ்தவர்களுக்கு வழங்கும் நாசரா என்ற பெயருக்கு ஒத்திருக்கிறது). அவர்கள் எபிரெயர்களுடைய நற்செய்தி என்ற நூலைப் பெற்றிருந்தார்கள். அதில் இவ்விதமாக எழுதப்பட்டுள்ளது: “கிறிஸ்து இவ்வுலக மக்களிடம் வரவேண்டும் என்று விரும்பிய போது, பிதாவாகிய இறைவன் பரலோகத்தின் வல்லமையுள்ளவர்களில் ஒருவராகிய மைக்கேலைத் தெரிவுசெய்து, கிறிஸ்துவைப் பாதுகாக்கும் பொறுப்பை அவரிடத்தில் ஒப்புக்கொடுத்தார். அந்த வல்லமை உலகத்திற்குள் வந்தது, அது மரியாள் என்று அழைக்கப்பட்டது, கிறிஸ்து அவருடைய கருவறையில் ஏழுமாதம் கருவாயிருந்தார் (ஸ்னிமெல்சருடைய நூல் பகுதி 1, 146- ஜெர்மானிய மொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது - Translated from German in Schneemelcher, volume 1, 146).

திரியேகத்துவ இறைவனை மறுதலித்தவர்கள் இஸ்லாத்திற்கு முந்தைய காலத்தில் வாழ்ந்தாலும் அவர்கள் குரானில் இருப்பதைப் போல கிறிஸ்துவைக் கனப்படுத்தினார்கள். இதிலிருந்து முஹம்மது பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவரை மறுதலிப்பது அவரிடத்திலிருந்து வந்தது அல்ல என்பது தெரிகிறது. அது அவருடைய காலத்தில் அரேபியாவில் வாழ்ந்த யூத கிறிஸ்தவ குழுக்களின் போதனைகளிலிருந்து பெறப்பட்டது. அந்தக் குழுக்களுடைய தவறான போதனைகளை குரானுக்குள் கொண்டு வந்ததன் மூலமாக அவர்களையும் இஸ்லாத்திற்குள் கொண்டுவர அவர் முயற்சித்தார்.

துக்க செய்தி: கிறிஸ்து இறைவனுடைய குமாரன் அல்ல என்ற புறக்கணிப்பும், இறைவன் திரியேகர் அல்ல என்ற புறக்கணிப்பும் முஹம்மதுவுக்கு வெளிப்படுத்தப்பட்டதல்ல. மாறாக, அவை இஸ்லாத்திற்கு முந்தைய காலத்தில் இருந்த ரபித்துவ யூத மார்க்கத்திலும் யூத-கிறிஸ்தவ குழுக்களுடைய போதனைகளிலிருந்தும் பெறப்பட்டது.

நல்ல செய்தி: கிறிஸ்து இறைவனுடைய உண்மையான குமாரன். அவரை நாம் விசுவாசிக்கும்போது அவருடைய பரலோக பிதா நாம் அவருடைய பிள்ளைகள் ஆவதன் மூலமாக இந்தப் பரிசுத்த திரித்துவத்தில் நாமும் ஐக்கியம் கொள்வதற்கு நமக்கு அதிகாரம் வழங்குகிறார்.

சாட்சி: என்னுடைய பெயர் சாய்தாவ், நான் மேற்கு ஆப்பிரிக்காவிலுள்ள பர்க்கினா பஸ்கோவில் வாழ்கிறேன். பிறப்பின்படி நான் ஒரு இஸ்லாமியன். நான் இஸ்லாமியச் சட்டங்களைக் கைக்கொண்டேன். நான் கூடுமானவரை குறித்த நேரத்தில் ஐந்துவேளை தொழுகையை நடத்தும்படி என்னை நானே கட்டாயப்படுத்தி வந்தேன். ஆயினும் சினிமா பார்க்க வேண்டும் என்ற ஆசையும் எனக்குள் கடுமையாக இருந்தது. ஏனெனில் உவோகடாகு என்ற பெரிய நகரத்தில் நான் வாழ்ந்தேன். அங்கு கிராமங்களைப் போலன்றி அதிக சினிமாக்கூடங்கள் உண்டு. “இராஜாதி இராஜா” என்ற படத்தை நான் ஒருநாள் காணச் சென்றேன். அது இயேசு வாழ்ந்தபோது நடைபெற்ற ஒரு கதையை மையமாகக் கொண்டது. நான் அந்தப் படத்தை ஆரம்பமுதல் கடைசிவரை முழுவதுமாகப் பார்த்தேன். மீண்டும் பல தடவை நான் அந்தத் திரைப்படத்தைச் சென்று பார்த்தேன். இவ்வாறு கிறிஸ்துவைக் குறித்த ஒரு படத்தை என்னுள் ஏற்படுத்திக்கொண்டேன். அதன்பிறகு எனக்கு ஒரு புதிய ஏற்பாடு கிடைத்தது. நான் அதை வாசித்தபோது ஒரு மனிதன் இன்னொரு மனிதனோடு பேசுவதைப் போல அதிலுள்ள ஒரு வசனம் என்னுடன் பேசியது. யோவான் 14:6-ல் உள்ள “நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன்” என்பதே அந்த வசனம். அந்த வசனத்தினால் நான் மேற்கொள்ளப்பட்டேன். அந்த வசனத்தின் பிற்பகுதி, “என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்” என்று கூறுகிறது. எனக்குள்ளாக “இந்த முஹம்மது யார்?” என்று கேட்டுக்கொண்டேன். அப்போது பயம் என்னைப் பற்றிக்கொண்டது. பிறகு, “உம்மைத் தவிர யாரும் இல்லையெனில் நான் உம்மிடம் வருகிறேன்” என்று எனக்குள் விண்ணப்பம் பண்ணினேன். அன்றிலிருந்து என்னுடைய வாழ்க்கை மாற்றமடைந்தது. நான் மனந்திரும்பி என்னுடைய வாழ்வை இயேசுவிடம் ஒப்படைத்தேன்.

விண்ணப்பம்: எங்கள் கர்த்தரும் மீட்பருமாகிய இயேசு கிறிஸ்துவே நீர் உம்மை எங்களுக்கு வெளிப்படுத்தி பிதாவினிடத்திற்குச் செல்லும் வழியை ஆயத்தப்படுத்தியதற்காக உமக்கு நன்றி. பிதாவினிடத்திலிருந்து அனுப்பப்பட்ட ஆவியின் மூலமாக எங்களை மறுபடியும் பிறக்கச் செய்து, சர்வவல்ல இறைவனுடைய பிள்ளைகளாக்கினீர். இவ்விதமாக நாங்கள் பிதாவாகிய இறைவனை ஆராதனை செய்கிறவர்களாகவும் பரலோகத்தில் செய்யப்படுவதைப் போல பூலோகத்திலும் உம்முடைய சித்தத்தைச் செய்கிறவர்களாகவும் மாற்றப்பட்டிருக்கிறோம். பிதா, குமாரன், பரிசுத்த ஆவியாகிய உம்முடைய பரிசுத்த நாமத்தை நாங்கள் துதித்து ஆராதனை செய்கிறோம். முழு உலகமும் உம்முடைய மகிமையால் நிறைந்திருக்கிற காரணத்தினால் உமக்கு நன்றி. எங்கள் வாழ்க்கையில் மட்டுமல்ல, எங்கள் மூலமாக மற்றவர்களுடைய வாழ்க்கையிலும் உம்முடைய இராஜ்யம் வரும்படியாக எங்களை உம்முடைய சத்தியத்தில் காத்துக்கொள்ளும்.

கேள்விகள்: திரியேகத்துவத்தை மறுதலித்த இஸ்லாத்திற்கு முந்தைய குழுக்கள் யாவை? குரானிலுள்ள எழுத்துக்கள் அவர்களுடைய எந்த எழுத்துக்களிலிருந்து பெறப்பட்டது?

மனப்பாடம்: கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபையும், தேவனுடைய அன்பும், பரிசுத்த ஆவியினுடைய ஐக்கியமும், உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென். (2 கொரிந்தியர் 13:14 – அப்போஸ்தலனாகிய பவுலுடைய வார்த்தைகள்).

www.Grace-and-Truth.net

Page last modified on June 07, 2013, at 11:34 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)